search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால பைரவர்"

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் மாதம் ஒரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு
    • குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.

    பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்

    குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.

    இதற்கு பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.

    அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதி சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.

    பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

    ''அஞ்சருவி சலத்தருகு யடுத்தே வரகலூராம் காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டை செங்கனூராம் முழு மண்டலமே.

    தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.

    இப்பாடலின் பொருள்:

    குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர்.

    சோழபுரத்தில் பைரவ சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர், திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.

    திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.

    அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

    வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

    பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது.

    செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

    ''போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.

    பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்

    • பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.
    • மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியை சொல்லலாம்.

    ஸ்ரீ பைரவர் 108 போற்றி

    ஓம் பைரவனே போற்றி

    ஓம் பயநாசகனே போற்றி

    ஓம் அஷ்டரூபனே போற்றி

    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

    ஓம் அயன்குருவே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி

    ஓம் அற்புதனே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி

    ஓம் ஆலயக்காவலனே போற்றி

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி

    ஓம் உக்ர பைரவனே போற்றி

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    ஓம் எல்லை தேவனே போற்றி

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

    ஓம் கபாலதாரியே போற்றி

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

    ஓம் கர்வ பங்கனே போற்றி

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி

    ஓம் கருமேக நிறனே போற்றி

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் கால பைரவனே போற்றி

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி

    ஓம் காசிநாதனே போற்றி

    ஓம் காவல்தெய்வமே போற்றி

    ஓம் கிரோத பைரவனே போற்றி

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    ஓம் சண்ட பைரவனே போற்றி

    ஓம் சட்டை நாதனே போற்றி

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் சிவத்தோன்றலே போற்றி

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி

    ஓம் சிக்ஷகனே போற்றி

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    ஓம் சிவ அம்சனே போற்றி

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

    ஓம் சூலதாரியே போற்றி

    ஓம் சூழ்வினை அறுப்பவனேபோற்றி

    ஓம் செம்மேனியனே போற்றி

    ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி

    ஓம் தலங்களின் காவலனே போற்றி

    ஓம் தீது அழிப்பவனே போற்றி

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி

    ஓம் நவரச ரூபனே போற்றி

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

    ஓம் நாய் வாகனனே போற்றி

    ஓம் நாடியருள்வோனே போற்றி

    ஓம் நிமலனே போற்றி

    ஓம் நிர்வாணனே போற்றி

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி

    ஓம் நின்றருள்வோனே போற்றி

    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

    ஓம் பகையளிப்பவனே போற்றி

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் பால பைரவனே போற்றி

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி

    ஓம் பிரளயகாலனே போற்றி

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி

    ஓம் பெரியவனே போற்றி

    ஓம் பைராகியர் நாதனே போற்றி

    ஓம் மல நாசகனே போற்றி

    ஓம் மகோதரனே போற்றி

    ஓம் மகா பைரவனே போற்றி

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி

    ஓம் மகா குண்டலனே போற்றி

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

    ஓம் முக்கண்ணனே போற்றி

    ஓம் முக்தியருள்வோனே போற்றி

    ஓம் முனீஸ்வரனே போற்றி

    ஓம் மூலமூர்த்தியே போற்றி

    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

    ஓம் ருத்ரனே போற்றி

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

    ஓம் வடுக பைரவனே போற்றி

    ஓம் வடுகூர் நாதனே போற்றி

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி

    ஓம் விபீஷண பைரவனே போற்றி

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
    • பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.

    பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு

    ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.

    ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.

    கடன் தொல்லை தீர

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.

    ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.

    பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.

    மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.

    நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.

    பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டு பூஜித்தான்.
    • பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபு.

    கால பைரவர் வழிபட்டுப் பூஜை புரிந்த லிங்கம் காசி லிங்கம் என்ற பெயருடன் உள்ளது. சப்தரிஷிகள் காளத்தீஸ்வரரைப் பூஜித்த பின்னர் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர். இவர்கள் பூஜை செய்த ஏழு லிங்கங்களும் மற்றும் எமன் பூஜை செய்த எமலிங்கமும் சித்திரகுப்தன் வழிபட்ட சித்திரகுப்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டுப் பூஜித்தான்.

    மார்கண்டேயர், அகத்தியர், வியாசர் போன்ற பலப்பல முனிவர்களும் வாயுநாதனை வழிபட்ட பிறகு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் மார்கண்டேய லிங்கம், அகத்திய லிங்கம், வியாச லிங்கம் என்ற திருநாமங்களுடன் விளங்குகின்றன. மகாபாரதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பு வியாசர் வழிபட்ட திருத்தரங்களில் திருக்காளத்தியும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களான சீனிவாசன், ராமன், கண்ணன் ஆகியோர் காளத்தி ஞானப்பிரகாசத்தைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.

    சீனிவாசனும், வேணுகோபாலன் கோவிந்தராஜன் என்ற பெயர்களுடன் கண்ணனும் உள்ளனர். ராமன் பிரதிட்சை செய்து பூஜித்த லிங்கம் ராமச் சந்திரலிங்கம் என்ற திருநாமத்துடன் உள்ளது.

    சீதை, அனுமன், பரதன் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் ராமன் சீதை உருவங்களும் உள்ளன. ராமனுக்கு அருள் புரிந்த காளத்தீஸ்வரர் ராமேஸ்வர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் உள்ளார். இந்த லிங்கம் வெண்மையாக உள்ளது.

    பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் பிரதிட்டை செய்து பூஜித்த லிங்கம் தருமலிங்கம் என்ற பெயருடன் திகழ்கின்றது. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஆறு ஆதாரச் சக்கர லிங்கங்களும் ஐந்து முகம் கொண்ட பஞ்சானன லிங்கமும் பூஜை செய்வதற்கு மிகச் சிறப்பாக விளங்குகின்ற ஸ்படிக லிங்கமும் உள்ளன. பின்புறம் எரிந்து கொண்டிரக்கும் விளக்கினால் ஸ்படிக லிங்கத்தில் அடிமுடியில்லாத ஜோதி தரிசனம் கிடைக்கின்றது.

    திருக்காளத்திக் கோவிலுக்குக் கல்லாலமரம், வில்வ மரம் ஆகியவை தலமரங்களாகவும் பொன்முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி நதி புனிதத் தீர்த்தமாகவும் விளங்குகின்றது. காளத்தி நாதர்த் திருக்கோயில் கோபுரங்களையும் மண்டபங்களையும் பிரகாரங்களையும் பலப்பல சன்னதிகளையும் கொண்டுள்ள பெரிய கோயிலாகும்.

    சோழர், பாண்டியர், விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், நகரத்தார் ஆகியோர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நூற்றியெட்டு லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் ஆகியவற்றோடு சோழலிங்கம், பாண்டிய லிங்கம், தெனாலி லிங்கம் ஆகிய லிங்கங்களும் உள்ளன.

    இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த ராமநாதன் செட்டியாரின் ஆள் உயரச் சிலையும் கோவிலில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய திருப்பணிக்கான திட்டம் வகுத்து அது அவருடைய வாழ்நாளுக்குள் முற்றுப் பெறாமல் நின்று போய் விட்டது என்பதைக் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோபுரம் தெரியப்படுத்துகின்றது.

    கோவிலின் உள்ளே கல்வெட்டுக்களால் நிரம்பிய காசி விஸ்வநாதர்க் கோவில் மிகவும் சிதலமடைந்து உள்ளது. கொடி மரத்திற்கு அருகே பலிபீடம் லிங்கம் ஆகியவற்றை எட்டு யானைகள் சுமந்து நிற்பது போல் அமைந்துள்ளன. அருகே யோகியுடன் கூடிய சிறிய லிங்கம் உள்ளது.

    ஓங்கார வடிவமாகிய லிங்கத்தில் மகரப் பகுதியாகிய பீடமும் உகரப் பகுதியாகிய ஆவுடையாரும் இல்லாமல் அகரப் பகுதியாகிய பாணம் மட்டுமே உள்ள லிங்கமும் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சன்னதியும் மற்றும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பத் தூண்களுடன் கூடிய லிங்க சன்னதிகளும் சிலந்தி, யானை, பாம்பு ஆகியவை சிவபூஜை செய்யும் திருக்காளத்தில் தல வரலாற்றைக் காட்டுகின்ற தனிச் சன்னதியும் உள்ளன.

    திரும்பிய பக்கமெல்லாம் சன்னதிகள்

    திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானுக்குக் காட்சி தந்தருளிய பரமனின் திருவடிகளுக்குச் சன்னதியுள்ளது போன்று திருக்காளத்தியிலும் ஈசன் திருவடிகள் காணப்படுகின்றன. திருவடிச் சன்னதியில் திருவடிகளுக்கு முன்பு நந்தியும் எழுந்தருளியுள்ளது.

    ஒருபுறம் விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்துள்ளது போன்றே மறுபுறம் மலையேறும் பாதையுள்ள கோபுரத்தின் அருகே மணிகங்கை என்னும் பொன் முகலி நதியைத் தோற்றுவித்த மணிகங்கேசர்க் கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. உள்ளிருக்கும் மண்டபத்தின் சுவர்களில் பாம்பு சிலந்தி யானை ஆகியவை வாயுலிங்கப் பொருளை வழிபடுவதைக் காட்டும் வண்ண வண்ண அழகிய ஓவியங்கள் சிதைந்து போயுள்ளன.

    இந்த மண்டபத்தில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் மேலே நான்கு முக லிங்க சன்னதி உள்ளது. நான்கு முகங்களையும் நன்றாகச் தரிசனம் செய்யும் வகையில் நான்கு புறமும் சிறு சிறு சாளரங்கள் உள்ளன. எல்லாச் சிவலாயலங்களிலும் உள்ளது போல் திருக்காளத்தீஸ்வரர்க் கோவிலிலும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    பெரிய நடராஜர், சிறிய நடராஜர் என்று இரண்டு ஆடல்நாயகன் திருவுருவங்கள் உள்ளன. அறுபத்து மூவர் சன்னதியோடு திருமுறைச் சன்னதியும் உள்ளது. நந்தியும் சண்டீசரும் பைரவரும் தங்கள் தங்கள் பதவிக்கு ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபாக உள்ளது.

    பிரம்மன் சிரம் அரிவதற்காக பைரவரைத் தோற்றுவித்த பைரவநாதர் எனப்படும் சிவ பைரவரும் வேட்டை நாய்கள் சூழத் தனிச் சன்னதியில் எதிரே நந்தியோடு எழுந்தருளியுள்ளார். பிரணவப் பெருமாள் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் இந்தக் கோலத்தைப் போற்றியுள்ளார்.

    சுந்தர கணபதி, பாலகணபதி, வல்லப கணபதி, இலக்குமி கணபதி, உக்தி கணபதி, பூத கணபதி, சக்தி கணபதி என்று பலப்பல விநாயகர் திருவுருவங்களும் சன்னதிகளும் உள்ளன. இவையே யன்றி பாதாள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது போன்று குறுகலான படிகள் வழியே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    உடுப்பி பால சுப்பரமணியர் சன்னதி, முருகன் சன்னதி என்று முருகனுக்குச் சன்னதிகள் உள்ளன.

    திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகப்பெருமானுக்கு ஆதியண்ணாமலையார்க் கோவில் கோவில் இருப்பது போன்று காளத்தியில் மலையுச்சியில் குடுமித் தேவரின் திருக்காட்சி பெற்ற கண்ணப்பருக்கு கோவில் உள்ளது. மலையுச்சியில் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள குடுமித் தேவரை சிவகோசரியார்எ ன்ற முனிவரும் கண்ணப்பரும் வழிபட்டனர்.

    பதினாறே வயதான கண்ணப்பர் முதல் முறையாக வேட்டைக்குச் சென்ற போது மலைமேலுள்ள குடுமித் தேவரைக் கண்டு ஆராத அன்பு கொண்டு அங்கேயே தங்கி விட்டார். ஆறு நாட்கள் உணவும் உறக்கமும் இன்றி சதாசர்வ காலமும் சிவ நினைவோடு குடுமித்தேவரின் அருகே இருந்தார்.

    ஒரு உறுப்புக்கு மாற்று உறுப்பு வைத்து சிகிச்சை செய்யும் மருத்துவம் உள்பட பல விதமான கலைகளையும் பதினாறே வயதான கண்ணப்பர் கற்றுத் தேர்ந்ததை Ôகலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்குÕ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றுகின்றார். வேறு யாருக்குமே இருக்க முடியாத இறையன்பினைக் கண்ணப்பர் கொண்டிருந்ததை இறைவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

    திண்ணன் ஈசனுக்குக் கண்டு அப்பியதால் கண்ணப்பன் என்று பெயர் பெற்றார். திருமாலும் இறைவனுக்குத் தாமரை மலராகத் தன் கண்ணை வைத்துப் பூஜை செய்ததால் தாமரைக் கண்ணன் என்று பெயர் பெற்றார். இருவருடைய வழிபாட்டிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது.

    விஷ்ணுவின் வழிபாடு பிரதிபலனை எதிர்ப்பார்த்து. பரம்பொருளிமிருந்து சுதர்சனச் சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபூஜை செய்தார். சிவபூஜை தடைப்பட்டு விட்டால் சக்கரம் கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் பூஜையைத் தடையின்றி முடிப்பதற்காக குறைந்து போன தாமரை மலருக்குப் பதிலாகத் தன் கண்ணைப் பறித்து வைத்து அதிர்த்துப் பூஜையை முடித்தார். இத்தகைய அன்பினை, பக்தியை எல்லோரிடத்திலும் காண முடியும்.

    ஆனால் கண்ணப்பர் வழிபாடு செய்தது இறைவனுக்காக எந்தவிதமான பிரதிபலனும் கருதாது ஈசனுக்காக தன் ஒரு விழியை மட்டுமன்று இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். இத்தகைய பக்தியை யாரிடத்திலும் காண முடியாது.

    தாட்சாயிணியாக, பார்வதியாக, மீனாட்சியாகப் பிறந்து வளர்ந்த போதும் மற்றும் காமாட்சி, விசாலாட்சி என்று எந்தப் பெயரில் எங்கு வந்த போதும் பல்லாண்டுகள் தவமும் பூஜையும் செய்த பின்புதான் பராசக்தியால் பரமேஸ்வரனைக் காண முடிந்தது. பரம்பொருளைக் கணவனாக அடைய வேண்டும், குற்றம் குறை நீங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

    ஆனால் கண்ணப்பரோ ஆறே நாட்களில் அகிலாண்டேஸ்வரரின் திருக்காட்சி கண்டு அவனது திருக்கரத்தால் தீண்டப் பெறும் பெறுதற்கு அரிய பெரும் பேறு பெற்றார். அவருடைய தன்னலமில்லாத பக்தி, இறைவனுக்காக இறைவனை வழிபட்ட மெய்யன்பு ஆயிரம் ஆண்டுகள் தேடித் திரி¢ந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாத பரமேஸ்வரனது திருக்காட்சியை ஆறே நாட்களில் கூட்டு வித்தது. மீண்டும் வந்து பிறக்காத பேரின்ப முக்தியையும் அருளச் செய்தது.

    கண்ணப்பரைப் போற்றாத பக்தர்கள் இல்லை எனலாம். சங்கப் புலவர்களின் பாடல் முதல் தற்காலத்துக் கீர்த்தனைகள் வரை கண்ணப்பர் போற்றப்படுகின்றார். கிடைத்துள்ள தேவாரத் திருமுறைகளை நோக்கும்போது ஏழு வயது வேதியர் சண்டீசரும் பதினாறு வயது கண்ணப்பருமே மிக அதிகமாகப் போற்றப்பட்டுள்ளனர்.

    மலையுச்சியில் உள்ள கண்ணப்பர்க் கோவிலில் ஆள் உயரப் பெரிய கண்ணப்பருக்கு அருகே அப்புனிதப் பெருமனைப் பெற்றெடுத்து உலகத்திற்குத் தந்த தாயாரின் சிறிய உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. கண்ணப்பர் சிவகோசரியார் வழிபட்ட லிங்க மெய்ப்பொருள் இன்றும் வில்வ மரத்தடியில் திறந்த வெளியிலேயே உள்ளது.

    கண்ணப்பருக்கும் சிவகோசரியாருக்கும் திருக்காட்சி தந்த காட்சியருளிய நாதர்க் கோவிலும் கண்ணப்பர்க் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. மலையுச்சியில் மட்டுமன்றி கீழே ஞானப்பிரகாசம் எழுந்தருளியுள்ள அடிவாரக் கோவிலில் கொடி மரத்திற்கு அருகேயும் கண்ணப்பர் உள்ளார்.

    காளத்திக் கணநாதரை தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அஞ்ஞானம் விலகுகின்றது. தீராத நோய் தீர்கின்றது. பிறவிப் பிணி நீங்கிப் பிறவாப் போரின்பம் உண்டாகின்றது. எல்லாவிதமான கிரக தோஷங்களும் குற்றங்குறைகளும் நீங்குகின்றன.

    • குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே என்பது முதுமொழி.
    • குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழி பாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

    எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது.

    குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறை களாக நம் முன்னோர் கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.பெரும்பாலான குலதெய்வங்களுக்கு பின்னணியில் இம் மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.

    பெரிய கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன வென்றால் இந்த மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

    பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும்.

    பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலை திறந்து வழிபட்டு அதன் பின்னரே வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும்.

    உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.

    குலதெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்தியேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

    உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.

    குலத்தை காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும்.

    பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் பங்குனி உத்தரத்தன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல் பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.

    கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

    குலதெய்வத்தின் சிறப்பு

    குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு ஜாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன.

    கருப்பு, ஐயனார், மதுரை வீரர், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர். திருவிழா நாட்களிலும், குலதெய்வ சிறப்பு பூஜைகளிலும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள்.

    கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல ஜாதிகளை சேர்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்ற சிறப்பு பெயர் கிராமத்தில் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

    அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

    திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன் நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக செய்கின்றார்கள்.

    `குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே...'

    `குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி...'

    என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளை குறிப்பிடுகின்றன.

    • காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள மகா காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதே போல பல்லடம் பொன்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.

    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • மகா காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள மகா காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதே போல பல்லடம் பொன்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.

    ×